search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அலுவலகம் முற்றுகை"

    தேவகோட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    தேவகோட்டையில் கடந்த 26–ந்தேதி இரவு பிரபு (வயது 28) என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குபதிவு செய்து 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயராமன் மகன் பிரகாஷ், சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமறைவானார்கள். இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், முத்துக்குமார் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.

    முக்கிய குற்றவாளியான பிரகாஷ் என்பவர் இதுவரை தலைமறைவாக இருக்கிறார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 1,150 பேர் நேற்று கலெக்டர் ஜெயகாந்தனை சந்திக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக கூறினர். அதற்கு போலீசார் மறுத்ததும், அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களில் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர். மற்ற அனைவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே அனுப்பினர்.

    இந்தநிலையில் வெளியே இருந்தவர்கள் திடீரென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபரை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அதைதொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கலெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வந்தவர்கள், தங்களுடன் வந்தவர்களை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அதில் கலெக்டரை சந்திக்க சென்ற 2 பெண்கள் தங்கள் விட்டு சென்ற கைக்குழந்தைகளை காணவில்லை என்று பதறினர். உடனே அங்கிருந்த போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றனர்.

    இது குறித்து கலெக்டரிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து கலெக்டர் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர், அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் 107 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் கணினி, இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். மாவட்ட அளவிலான பணிமாறுதல், கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று உட்பிரிவுகளில் பட்டா வழங்குதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் பணியை புறக்கணித்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திட ஏற்கனவே முடிவு செய்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த முடிவை கைவிட்ட சங்கத்தினர் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் திரண்டனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதி இன்றி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக 16 பெண்கள் உள்பட 79 கிராம நிர்வாக அதிகாரிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமையில், அச்சங்கத்தினர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்து, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 
    ×